சிவகங்கை காங்., வேட்பாளர் அறிவிக்கவில்லை : சிதம்பர ரகசியமா?

லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதி தவிர மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்புமனு தாக்கல் மற்றும் பிரசாரத்தை ஏற்கனவே துவக்கி விட்ட நிலையில், காங்., மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் குழப்பத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்., தலைமை வெளியிட்டது.

சிவகங்கை ரகசியம் என்ன? :

காங்.,க்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் சிவகங்கை தவிர மற்ற 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. சிவகங்கை தொகுதியில் காங்., சார்பில் ப.சிதம்பரம் அல்லது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது சிதம்பரம் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிட உள்ளதாக தகவல் கசிந்தது. இதனால் காங்.,க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சிவகங்கை தொகுதிக்கு எச்.ராஜாவை வேட்பாளராக பா.ஜ., அறிவித்தது. ஆனால் தற்போது காங்., வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ., எச்.ராஜாவை வேட்பாளராக நிறுத்தி உள்ளதால், அவருக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வேட்பாளரை நிறுத்த வேண்டும் என காங் தலைமை திட்டமிட்டிருப்பதே சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிக்காததற்கான காரணமாக கூறப்படுகிறது.

வேட்பாளர் யார் ? :

ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்க கட்சி தலைமை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுதர்சன நாச்சியப்பன் அல்லது கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதிக்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சிவகங்கை தொகுதிக்கான காங்., வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்து, இன்று இரவுக்குள் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Sharing is caring!

shares