மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – புதிய பிரசாரத்தை தொடங்கினார் மோடி

‘நான் உங்கள் காவலாளி’ என்ற வாசகத்தை டுவிட்டரில் டிரென்ட் ஆக்கிய பிரதமர் மோடி இன்று ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்னும் ஹேஷ்டாகுடன் புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்புறம் காவலாளி என்று குறிப்பிடப்படும் ‘சவுக்கிதார்’ என்ற இந்தி சொல்லை அடைமொழியாக பயன்படுத்தினார்.

மோடியை தொடர்ந்து அனைத்து மத்திய மந்திரிகளும், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல் மந்திரிகளும், இதர மந்திரிகளும், கோடிக்கணக்கான பாஜக பிரமுகர்களும் ‘சவுக்கிதார்’ என்ற சொல்லை அடைமொழியாக பயன்படுத்தியதால் இந்த வார்த்தை டுவிட்டரில் பிரபலம் ஆனது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய விமானப்படைகள் அத்துமீறி புகுந்து நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிக்கப்படாததால் இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘பாகிஸ்தானில் இருந்து 8 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏதோ செய்து விட்டார்கள் என்பதற்காக நீங்கள் (இந்தியா) ஒட்டுமொத்த (பாகிஸ்தான்) நாட்டின்மீது எகிறிப்பாய முடியாது’ என கூறியதாக செய்திகள் வெளியாகின.

இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்னும் தனிநாடு உருவாக வேண்டும் என 23-3-1940 அன்று லாகூர் நகரில் முஸ்லிம் லீக் கட்சி நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் மாதம் 23-ம் தேதியை தேசிய நாளாக பாகிஸ்தான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அரசக்குடும்ப வாரிசுகள் முன்னர் நாடு இருந்த நிலையை மட்டுமே இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததில்லை. இப்போது இது புதிய இந்தியா – பயங்கரவாதிகளுக்கு வட்டியுடன் சேர்த்து அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும்.

பாகிஸ்தான் தேசிய நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதுடன் நமது நாட்டின் ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் ராகுலின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான சாம் பிட்ரோடா அவமதித்துள்ளது மிகப்பெரிய வெட்கக்கேடு என மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக #JantaMaafNahiKaregi (மக்கள் மன்னிக்க மாட்டார்கள்) என்னும் ஹேஷ்டாகை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள மோடி, நமது படைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகின்றன. 130 கோடி இந்தியர்களும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதை நாம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

shares