தேனி தொகுதியில் டிடிவி தினகரன் நின்றாலும் கவலை இல்லை – ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி

தேனி தொகுதியில் தன்னை எதிர்த்து தினகரனே நின்றாலும் கவலை இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் கூறினார்

தேனி பாராளுமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தரிசனம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேனி தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- தேனி தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேனி மட்டுமல்ல 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்.

கே:- தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

ப:- என்னை எதிர்த்து டிடிவி தினகரனே நின்றாலும் எங்களுக்கு கவலையில்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Sharing is caring!

shares