மீண்டும் ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும் சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும் சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டி

மக்களவை தேர்தலில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட 15 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் போட்டியிடும் 15 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அவர்களில் 11 பேர் உத்தரப்பிரதேசத்திலும், 4 பேர் குஜராத்திலும் போட்டியிட உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதிகளில் இருவரும் போட்டியிட்டு வருவதால் கணிசமாக வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுகளில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு சோனியாகாந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடுவாரா என்று தொண்டர்களிடையே சந்தேகம் இருந்த நிலையில் அவர் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

ராகுல்காந்தி, சோனியாகாந்திக்கு தேர்தலில் பிரச்சாரம் மட்டும் செய்து வந்த பிரியங்காகாந்தி கடந்த ஜனவரி மாதம் நேரடி அரசியலில் இறங்கினார். உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், சோனியாகாந்தியின் ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிடலாம் என ஊகங்கள் எழுந்தன. ஆனால் அவரது பெயர் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அமேதி, ரேபரேலி தொகுதியில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தப்போவது இல்லை என்று சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான்குர்ஷித், ஜிதின் பிரசாத், ஆர்பிஎன் சிங் ஆகியோர் ஏற்கனவே போட்டியிட்ட பரூகாபாத், தாரஹரா, குஷி நகர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் காத்ரி, பைசாபாத் தொகுதியிலும், குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பரத்சின் சோலான்கி ஆனந்த் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Sharing is caring!

shares