சீமான் நண்பர் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  (JKLF) என்ற பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் மீதான பிடியை காஷ்மீர் காவல்துறை இறுக்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக பிப்ரவரி 22ல் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் [Public Safety Act (PSA)] கீழ் மாலிக் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். எந்தவித விசாரணையும் இன்றி இரண்டு ஆண்டுகாலம் சிறையில் அடைத்து வைக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து காஷ்மீரை தனியாக பிரிக்க கோரி ஆயுதமேந்தி போராடி வந்த யாசின் மாலிக், கடந்த 1990ல் காஷ்மீரின் முதல்வராக இருந்த முஃப்தி முஹம்மது சயீதின் மகள் டாக்டர்.ரூபியா சயீத் கடத்தல் வழக்கு மற்றும் 5 விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்குகளில் முதன்மை குற்றவாளியாவார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மஃக்புல் பாத்-க்கு தூக்கு தண்டனை அளித்த நீதிபதி நீல்கந்த் கன்சுவை கொலை செய்த வழக்கு, தூர்தர்ஷன் கேந்திரா இயக்குநர் லஸ்ஸா கவுல் கொலை வழக்கு ஆகிய வழக்குகளிலும் யாசின் மாலிக் முக்கிய குற்றவாளியாவார்.

29 வருடங்களாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்குகளை தூசிதட்டி எடுத்துள்ள சிபிஐ இதன் மீது தற்போது நடவடிக்கையை துரிதப்படுத்தி யாசின் மாலிக்கை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளார் சீமான் உடன் மேடைகளில் அடிக்கடி தோன்றி தமிழகத்தில் பேசியதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது…

Sharing is caring!

shares