‘தி மிஸ்ஸிங் 54’ என்று அழைக்கப்படும் காலத்தால் மறக்கப்பட்ட 54 இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் தவிப்பு

பாகிஸ்தான் பிடியில் உ.ள்ள இந்திய விமானப் படை கமாண்டர் அபிநந்தனை இன்று விடுவிக்கப்போவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

அபிநந்தன் மட்டுல்ல பாகிஸ்தானில் காலத்தால் மறக்கப்பட்ட 54 இந்திய வீரர்களும் உள்ளனர். ராணுவம் மற்றும் விமானப் படையை சேர்ந்த இவர்கள் ‘தி மிஸ்ஸிங் 54’ என்று அழைக்கப்படுகின்றனர்.

கடந்த 1971-ம் ஆண்டு போர் முதல் இவர்கள் பாகிஸ்தான் பிடியில் உள்ளனர். இவர்கள் தங்கள் நாட்டு சிறையில் இருப்பதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. என்றாலும் இவர்கள் உயிருடன் இருப்பதாகவே நம்பப்படுகிறது.

இவர்களின் குடும்பத்தினர் ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தை அணுகிய போதிலும் அவ்விரு அமைப்புகளாலும் இவர்களுக்கு உதவ முடியவில்லை.

இதற்கு மாறாக 1971-ம் ஆண்டு போரின்போது இந்தியாவிடம் சரண் அடைந்த பாகிஸ்தானிய வீரர்கள் 90 ஆயிரம் பேரையும் போர்க் கைதிகளாக இந்தியா ஏற்றுக்கொண்டது. சிம்லா உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

1989-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர்கள் இருப்பதை அந்நாடு முற்றிலும் மறுத்தது. 1989-ல் பாகிஸ்தான் சென்ற இந்திய அதிகாரிகளிடம் அப்போதைய பிரதமர் பெனாசிர் புட்டோ, பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் இருப்பதாக கூறினார். இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்லாமாபாத்தில் பிரதமர் பெனாசிரை அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தபோது, போர்க் கைதிகள் விவகாரத்தை எழுப்பினார். அதற்கு பெனாசிர், இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவதாக கூறினார். ஆனால் பிறகு இந்த விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக மாறியது.

முஷாரப் மறுப்பு

பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் இருந்தபோது, தங்கள் நாட்டில் இந்திய வீரர்கள் எவரும் இல்லை என்றார். இதன் மூலம் முந்தையை நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் திரும்பியது.

என்றாலும் 54 இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1972-ல் பாகிஸ்தான் சிறையில் இருப்பவர்களில் ஒருவரின் புகைப்படத்தை ‘டைம்’ இதழ் வெளியிட்டது. இந்திய வீரரான அவரை அவரது குடும்பத்தினர் உடனே அடையாளம் கண்டனர். அதுவரை அவர் போரில் இறந்ததாகவே கருதி வந்தனர்.

பெனாசிர் புட்டோ வரலாறு

பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாற்றை பிரிட்டன் வரலாற்று அறிஞர் விக்டோரியா ஸ்காஃபீல்ட் எழுதினார். அவர், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் 1971-ம் ஆண்டு இந்திய போர்க் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பெனாசிரின் வழக்கறிஞர் இதை தன்னிடம்கூறியதாகவும் தெரிவித்தார்.

Sharing is caring!

shares