நடுவானில் நடைபெற்ற சண்டையில் இந்தியாவின் மிக் 21 ரக விமானத்தை இழக்க நேரிட்டது இந்தியா அறிவிப்பு

பாகிஸ்தான் போர் விமானங்களுடன் நடுவானில் நடைபெற்ற சண்டையில், துரதிஷ்டவசாக இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை இழக்க நேரிட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே அசாதாரணமான சூழல் நிலவும் நிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமாரும், விமானப் படை துணை மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூரும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இன்று காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை தாக்கும் நோக்குடன் வந்ததாக ரவீஸ் குமார் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்திய விமானப்படை உஷார் நிலையில் இருந்த காரணத்தினால், பாகிஸ்தான் போர் விமானங்களின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நடுவானில் நடைபெற்ற மோதலில் இந்தியாவின் மிக் 21 ரக விமானம் பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரவீஸ் குமார் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை, இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார். இந்தச் சண்டையில், இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை இழக்க நேரிட்டதாகவும், அதை இயக்கிய விமானி மாயமாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். மாயமான விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்து இருப்பதை சுட்டிக் காட்டிய ரவீஷ் குமார், அதனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமானியை மீட்பதற்கு தூதரக ரீதியிலோ அல்லது ஐ.நா. அவை மூலமாகவோ நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரவீஷ் குமார், இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் தற்போது வரை முறையாக தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

shares