கடையை காலி செய்ய சொல்லி பெண்களை அடித்து, உதைத்து தி.மு.க-வினர் அடாவடி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணின் கடையைக் காலி செய்யக்கோரி தி.மு.க ஒன்றியச் செயலாளர் மற்றும் தி.மு.க-வினர், கடையை அடித்து உதைத்து, பெண்களைத் தாக்கி, அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பைரவர் கோயில் அருகே வாசுகி என்பவர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, கடையில் தேங்காய் வியாபாரம் மற்றும் பூஜைப் பொருள்கள் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், பக்தர்களால் உடைக்கப்படும் தேங்காய்கள் அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தைக் கடந்த சில வருடங்களாக வாசுகி எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இந்த வருடம் திருமயம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் சரவணனின் அண்ணனான சிவராமன் ஏலம் எடுத்துள்ளார். இதையடுத்து, வாசுகியின் பெட்டிக்கடைக்கு எதிரே சிவராமனும் ஒரு பெட்டிக்கடை வைத்தார். ஆனாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், வாடிக்கையான கடை என்பதால், வாசுகியின் கடைக்குச் சென்று தேங்காய் உட்பட அனைத்து பூஜைப் பொருள்களும் வாங்கிச்செல்கின்றனர். சிவராமன் கடைக்கு பெரும்பாலான பக்தர்கள் பூஜை பொருள்கள் வாங்கச் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க ஒன்றியச் செயலாளர் சரவணன், சிவராமன் மற்றும் தி.மு.க-வினர் வாசுகியின் கடையைக் காலி செய்யச் சொல்லி கடந்த சில வாரங்களாகத் தொடர் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று வாசுகியின் கடைக்கு தி.மு.க-வினருடன் சென்ற ஒன்றியச் செயலாளர் சரவணன் வாசுகியிடம் கடையை காலி செய்யச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாசுகி கடையைக் காலி செய்ய மறுக்கவே, ஆவேசமடைந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் தி.மு.க-வினர் கடையில் இருந்த தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை சாலையில் வீசி எறிந்தனர்.

இதைத் தட்டிக்கேட்க முயன்ற வாசுகி அவரின் தங்கை கெளரி மற்றும் உறவுக்காரப் பெண்கள் 4 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால், காயமடைந்த பெண்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. கோயில் கடை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க ஒன்றியச் செயலாளர் மற்றும் தி.மு.க-வினர் சேர்ந்து பெண்களை அடித்து, உதைத்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sharing is caring!

shares