அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
வாஷிங்டன்: ”அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை,” என அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்தர் பல்டி அடித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் வடகொரியா அடுத்தடுத்து நடத்திய அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை உற்று நோக்க வைத்து பதற்றத்தை ஏற்படுத்தியது.இதனால் கோபமடைந்த அமெரிக்கா, ஐ.நா.,வில் வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் உட்பட பல்வேறு தடைகளை விதித்ததோடு, ‘அணு ஆயுத சோதனைகளை கைவிடா விட்டால், அந்நாட்டை தாக்குவோம்’ என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில், தன் பங்காளி நாடான தென்கொரியாவுடன் இணக்கம் காட்டியது வடகொரியா.
இதைத் தொடர்ந்து, தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் முயற்சியில் அமெரிக்கா – வடகொரியா உறவில் பதற்றம் தணிந்ததுடன், டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதாக கிம் ஜாங் உன் அறிவித்தார், இதை தொடர்ந்து ஜூன் 12ல் சிங்கப்பூரில் டிரம்ப் – கிம் சந்திப்பு நிகழ்ந்தது.அதனை தொடர்ந்து சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட வடகொரியா, அணு ஆயுத ஒழிப்பை மேற்கொள்ள ஒப்புக் கொள்வதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து டிரம்ப் – கிம் இடையேயான இரண்டாவது சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் பிப்.,27, 28 ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், ”வியட்நாமில் நடைபெற உள்ள கிம் ஜாங் உன் உடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.
இருவரும் வியட்நாம் சந்திப்பு குறித்து ஆலோசித்தோம். இச்சந்திப்பில் பல விஷயங்கள் வெளிவரும் என எண்ணுகிறேன். அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு காலக்கெடு நிர்ணயித்து வடகொரியாவுக்கு நாங்கள் நெருக்கடி தரவில்லை,” என்று கூறினார்.