மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் செய்தது ஊழல் மட்டுமே நன்மைகள் எதுவும் இல்லை – பிரதமர் மோடி

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது என்றார். மும்பை தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், புல்வாமா தாக்குதலுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கையை எடுத்த நமது ராணுவத்தினருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது புதிய இந்தியா என்றும், பயங்கரவாதிகளுக்கு மிகப் பெரிய பதிலடி தரப்படும் என்றும் கூறிய அவர், உலகமே பயங்கரவாதத்திற்கு எதிரான நமது யுத்தத்தை பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

மோடி வெறுப்பை, சிலர் நாட்டுக்கு எதிரான வெறுப்பாக காட்டுவதாகவும், சிலரது அறிக்கைகள் பாகிஸ்தான் ஊடகங்களில் மகிழ்ச்சியோடு ஒளிபரப்பப்படுவதாகவும் அவர் கூறினார். நமது ராணுவத்தை நம்புகிறீர்களா, சந்தேகிக்கிறீர்களா என்று அவர்களிடம் கேட்க விரும்புவதாகத் தெரிவித்த அவர், நிலையான, நித்தியமான இந்திய நாட்டை உங்கள் அரசியலுக்காக பலவீனப்படுத்தாதீர்கள் என்றார்.

தி.மு.க. மத்திய ஆட்சியிலே இருந்த போது மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி அமைச்சரவை பொறுப்புகள் குறித்து தொலைபேசி பேரங்கள் நடந்ததை அனைவரும் நன்கு அறிவார்கள் என்றார்.

புகழ்பெற்ற மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் நடுத்தர வர்க்கத்தினரை இழிவு படுத்தி பேசியவர் என்றும், அவர், நீதிமன்ற படிகளில் ஜாமீன் கேட்டு ஏறி இறங்கிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அரிய வாய்ப்பை பற்றிக் கொண்டு அரிய செயல்களைச் செய்ய திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி துணிச்சல் மிக்க உறுதியான முடிவை எடுக்கவே இந்திய மக்கள் பெரும்பான்மையுள்ள அரசை அமைத்ததாகத் தெரிவித்தார். மக்கள் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையுமே விரும்புகிறார்கள் என்றும், வாரிசு அரசியலை விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். .

பா.ஜ.க. தலைமையிலான அரசு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், ஒரு கோடியே 10 லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அறிவிக்கப்பட்ட திட்டம் 24 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக நவீன ரயிலான தேஜாஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளதாகவும், 1964-ஆம் ஆண்டு புயலில் அழிந்த பாம்பன் ரயில் தடம் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Sharing is caring!

shares