தீவிரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையில் இந்தியப் படைகளுக்குத் துணை நிற்போம் என 21 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயலும் பாகிஸ்தானுக்கு டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தீர்மானங்களை வாசித்தார்.

அதில் கடந்த 14-ஆம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் உயிர் தியாகத்தை ஆளும் மத்திய அரசு குறுகிய நோக்கத்துடன் அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் அன்று இந்திய விமானப்படை பாகிஸ்தான் தீவிரவாத நிலைகள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கும் அந்த கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மாயமான விமானி குறித்தும் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாத்து, நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு வலியுறுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Sharing is caring!