விமான கடத்த முயன்றவரை சுட்டு வீழ்த்திய இராணுவம் பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

வங்காள தேச அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் ஒரு விமானம், 148 பயணிகளுடன், தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு நேற்று புறப்பட்டது. வழியில், கடலோர நகரமான சிட்டகிராம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்தில், பயணிகளுடன் அமர்ந்திருந்த ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் எழுந்தார். விமானத்தை கடத்துவதாக அறிவித்தார்.

விமானிகள் இருக்கும் பகுதிக்குள் அவர் நுழைய முயன்றார். அவரை விமானிகள் தடுத்தபோது, அவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அவர் துப்பாக்கி முனையில் மிரட்டியதால், சிட்டகிராம் விமான நிலையத்துக்கே விமானம் மீண்டும் திரும்பியது. அங்கு அவசர, அவசரமாக தரை இறக்கப்பட்டது.

விமான கடத்தல் பற்றிய செய்தி ஏற்கனவே தெரிய வந்ததால், அந்த விமானம் தரை இறங்கியவுடன், பாதுகாப்பு படையினர் விமானத்தை சுற்றி வளைத்தனர். விமான நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நிறத்தப்பட்டது. வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது.

விமானத்தின் அவசர வழி வழியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஒரு எம்.பி.யும் அடங்குவார். கடைசியாக, 2 விமானிகளும் வெளியேறினர்.

கடத்தல் ஆசாமி, தான் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்யுமாறும் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்தார்.

பின்னர், அதிடியாக உள்ளே நுழைந்த கமாண்டோக்கள், கடத்தல் ஆசாமியை சரண் அடையுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டதால், கமாண்டோக்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 8 நிமிடங்கள் நீடித்த துப்பாக்கி சூட்டில், கடத்தல் ஆசாமி பலியானார்.

அவர் பெயர் மஹதி என்றும், வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. கைத்துப்பாக்கியுடன் வெடிபொருட்களும் வைத்திருந்தார். அந்த பொருட்களுடன் அவர் விமானத்தில் ஏறியது எப்படி என்று விசாரணை நடந்து வருகிறது.

Sharing is caring!